புத்ராஜெயா, செப். 9- கடந்த 2021 முதல் இவ்வாண்டு வரை புதிதாக பதிவு செய்யப்பட்ட திவால் சம்பவங்களில் 10 முதல் 13 விழுக்காடு அரசு ஊழியர்களை உள்ளடக்கியுள்ளது என மலேசிய திவால் இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ எம். பக்ரி அப்துல் மஜிட் கூறினார்.
தேசிய அளவில் திவால் நிலை குறைந்து வருவதை தரவுகள் காட்டினாலும் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது என அவர் சொன்னார்.
திவாலகும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு 10 விழுக்காடாக இருந்த வேளையில் 2021 இல் 10 விழுக்காடாகவும் 2022இல் 11 விழுக்காடாவும் 2023 இல் 13 விழுக்காடாகவும் இவ்வாண்டு இதுவரை 14 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அரசு அதிகாரிகள் மத்தியில் நிதியை நிர்வகிப்பதில் காணப்படும் பலவீனம் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பொதுச் சேவைத் துறையின் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் திவாலாகும் பட்சத்தில் கடுமையான கடன் பிரச்சனை மற்றும் பொதுச் சேவைத் துறையின் தோற்றத்திற்கு களங்கும் ஏற்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படலாம்என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
நீண்ட காலத்திற்கு நீடித்து வரும் கடுமையான கடன் பிரச்சினையின் தாக்கத்தைக் குறைப்பதற்காக சில அரசு ஊழியர்கள் தங்களாகவே முன்வைந்து திவாலாக்கும்படி கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.
தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் கடன் நிலை மற்றும் அவர்களின் நடவடிகைகளில் ஏற்படும் மாற்றங்களை மேலாளர்கள் அணுக்கமாக கண்காணித்து வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


