கோலாலம்பூர், செப்.6 - தன் பெற்றோரை கடந்தாண்டு இறுதியில் கொலை செய்ததாக சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை வேலையில்லாத ஒருவர் இன்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
நீதிபதி கே. முனியாண்டி முன்னிலையில் இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர் அப்பெண்டி முகமது அகுஸ் @ முகமது அலி (வயது 43) என்ற அந்நபர் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
கடந்தாண்டு டிசம்பர் 9ஆம் தேதி இரவு மணி 7.10 - 7.20க்கும் இடையே பிரிக்ஃபீல்ட்ஸ், கம்போங் சுங்கை பென்சாலா, ஜாலான் பென்சாலா ஹிலிர் 6 எனும் முகவரியிலுள்ள ஒரு வீட்டில் முகமது அகுஸ்@ முகமது அலி ஓமார் (வயது 82) மற்றும் டார்லிஸ்மா இன்ஜாத்து சாலே (வயது 72) ஆகியோரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12க்கும் குறையாதப் பிரம்படி வழங்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் முடிவில் உறுதியாக இருக்க விரும்புகிறாரா என்பதைக் கேட்டறியுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ருசைனியிடம் சுல்கிப்லியிடம் நீதிபதி முனியாண்டி கேட்டுக் கொண்டார்.
குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றத்தை ஒப்புக் கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் காரணங்களை வழக்கறிஞர் விளக்கிய போதிலும் அப்பெண்டி குற்றத்தை ஒப்புக் கொள்வதில் உறுதியாக இருந்தார்.
தாம் இந்த வழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்று ருசைனி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ருசைனியின் இந்த கோரிக்கைக்கு அரசுத் தரப்பு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தையும் அதற்கான காரணங்களையும் விளைவுகளையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


