கோலாலம்பூர், செப். 6 - அவசரகாலச் சட்டம் தொடர்பாக மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தீய நோக்கத்துடன் பதிவொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டிலிருந்து பகுதி நேர ஊழியர் ஒருவரை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
வழக்கின் முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரான வான் முகமது அமான் வான் முகமது இஷாக்கிற்கு (வயது 43) எதிராக அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ எம்.எம். எட்வின் பரம்ஜோதி அவரை வழக்கிலிருந்து விடுவித்தார்.
அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களைக் கேட்ட பின் சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாதங்கள் படிக்கப்பட்டது. பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. ஆகவே, அந்நபரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து ஜாமீன் தொகையையும் (வெ.3,000) திரும்ப ஒப்படைக்க உத்தரவிடுகிறது என்று எட்வின் தனது தீர்ப்பில் கூறினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி காலை 10.59 மணிக்கு 'அமான் முகமது' என்ற சுயவிவரப் பக்கத்தைப் பயன்படுத்தி முகநூல் செயலி மூலம் மற்றவர்களைப் புண்படுத்தும் நோக்கத்துடன் தெரிந்தே ஒரு பதிவை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டை வான் முகமது அமான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
புக்கிட் அமான் காவல் தலைமையகம், 27வது மாடி, மெனாரா கேபிஜேவில் உள்ள இணைய மற்றும் பல்லூடக குற்றப் புலனாய்வுத் துறை 2021ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி மாலை 4.12 மணிக்கு அந்தப் பதிவை வாசித்தது.


