ஷா ஆலம், செப். 6 - பண்டார் எல்மினாவில் 1,063 வீடுகளை உள்ளடக்கிய
ரூமா இடாமான் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை மாநில அரசு
மேற்கொள்கிறது.
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு முழுமையடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த
ரூமா இடாமான் அமானி திட்டத்தில் 1,000 முதல் 1,120 சதுர அடி கொண்ட
வீடுகள் தலா 250,000 வெள்ளி மற்றும் அதற்கும் மேற்பட்ட விலையில்
விற்கப்படும்.
மொத்தம் 28 கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்பிலான இந்த திட்டத்தை
காகாசான் நாடி செர்காஸ் பெர்ஹாட் நிறுவனம் பெர்மோடலான் நெகிரி
சிலாங்கூர் பெர்ஹாட்டின் (பி.என்.எஸ்.பி.) துணை நிறுவனமான
பி.என்.எஸ்.பி. சென்.பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து
மேற்கொள்கிறது.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமிருடின் இரண்டு புளோக்குகளைக்
கொண்ட இந்த 32 மாடி வீடமைப்புத் திட்டம் மாநில மக்கள் சொந்த
வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு
வரும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக விளங்குகிறது என்று
சொன்னார்.
வீடுகளுக்கான தேவையை ஆக்ககரமான முறையில் கையாள்வதற்கு
சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் (எம்.பி.ஐ.), பி.என்.எஸ்.பி. மற்றும்
காகாசான் நாடி நிறுவனம் ஆகிய தரப்பினர் நல்கி வரும் ஒத்துழைப்பை
தாம் பெரிதும் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாம் வெறும் வீடமைப்புத் திட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை. மாறாக,
பண்டார் எல்மினாவில் குடியிருப்பு மண்டலம், வர்த்தக மற்றும்
தொழிலியல் சூழலையும் உருவாக்கித் தருகிறோம் என்றார் அவர்.
மொத்தம் 8.9 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் இந்த வீடமைப்புத்
திட்டத்தில் அனைத்து வீடுகளும் தளவாடங்கள், மற்றும் தொலைக்காட்சி,
குளிர் பதனப் பெட்டி சமையலறை கேபிட் அமலாரி, ஹீட்டர் கருவி,
குளிர்சாதனம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை உள்ளடக்கியிருக்கும்.


