பூச்சோங், செப். 6 - போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆப்பிரிக்க கொள்ளைக்
கும்பலின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் பூச்சோங் ஜெயா
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் மெனாரா கே.எல்.எச். கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில்
நேற்றிரவு 10.50 மணியளவில் நிகழ்ந்ததாக புக்கிட் அமான்
குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ சுஹைலி முகமது
ஜைன் கூறினார்.
அந்த சந்தேகப் பேர்வழியைக் கைது செய்யும் நோக்கில் அந்த
குடியிருப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மீது அவ்வாடவர் இரு துறை
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் சொன்னார்.
காவல் துறையினர் அவ்வீட்டை முற்றுகையிட்ட போது வீட்டில் தனியாக
இருந்த அந்த சந்தேகப் பேர்வழி போலீசாருக்கு ஒத்துழைப்புத் தர
மறுத்ததோடு அவர்களை நோக்கி இரு முறை துப்பாக்கி வேட்டு
கிளப்பினார். இதன் காரணமாகப் பதில் தாக்குதல் நடத்த வேண்டிய
நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த வீட்டில் நடத்தப்பட்டச் சோதனையில் இரண்டு பாராங் கத்திகள், ஒரு
போலி எண் பட்டை, கள்ள நோட்டுகள் அடங்கிய கைப்பை ஆகியவை
கைப்பற்றப்பட்டன என்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த
போது அவர் தெரிவித்தார்.
அந்நபர் போலியான ஐ.நா. அகதிகளுக்கான அடையாள அட்டையை
வைத்திருந்ததாகக் கூறிய அவர், சந்தேகப் பேர்வழியின் வயது மற்றும்
அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விபரங்களை அறிய தொடர்ந்து
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான அந்நபர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல்
தீவிரமாகச் செயல்பட்டு வந்த ஆயுதமேந்திய ஆப்பிரிக்க கொள்ளைக்
கும்பலின் உறுப்பினர் என்றும் அவர் கூறினார்.


