கோலாலம்பூர், செப். 5 - சட்டவிரோதமான முறையில் மின்சார மற்றும்
மின்னியல் மற்றும் உலோகப் பொருள்களை மறுசுழற்சி செய்யும்
நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஏழு தொழிற்சாலைகளுக்கு எதிராக
காவல் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
கோலக் கிள்ளான், கம்போங் தெலுக் கோங்கில் உள்ள அந்த ஏழு
தொழிற்சாலைகள் மீது கடந்த திங்கள்கிழமை காலை 11.000 மணியளவில்
மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் 9 கோடியே 70 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட்
அமான் உள்நாட்டுப பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர்
டத்தோ முகமது யூசுப் மாமாட் கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் கணினி மற்றும் கைபேசி
போன்ற மின்னியல் உபகரணங்களைப் பிரித்து அதிலிருந்து தங்கம்,
தாமிரம், இரும்பு, ஈயம் போன்ற உலோகங்களைப் பிரிதெடுக்கும் பணிகள்
அந்த தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்
சொன்னார்.
அந்த மின்சார மற்றும் மின்னியல் கழிவுகள் யாவும் பழைய உலோகப்
பொருள்கள் என அதிகாரிகளிடம் பிரகடனப்படுத்தப்பட்டு நாட்டிற்குள்
கொண்டு வரப்பட்டுள்ளன. பழைய உலோகப் பொருள்களை நாட்டிற்குள்
கொண்டு வர சட்டத்தில் அனுமதி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அப்பகுதியில் தொழிலை மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ உரிமத்தை
காட்டத் தவிறியது உள்ளிட்ட பல குற்றங்களை அந்த தொழிற்சாலைகள்
புரிந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
லைசென்ஸ் இன்றியும் முறையாகப் பதிவு பெறாமலும் நடத்தப்பட்டு வந்த
இந்த தொழிற்சாலைகள் லட்சக்கணக்கான வெள்ளி லாபத்தை ஈட்டி
வந்துள்ளதோடு சட்டவிரோத அந்நிய நாட்டினரையும் வேலைக்கு
அமர்த்தியுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டது என்று நேற்று இங்கு
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின்
ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் ஐந்து
உள்நாட்டினரும் 31 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டனர் என்றார்
அவர்.


