சிரம்பான், செப். 5 - பத்து வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் இரு
வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் இங்குள்ள
தாமான் அரோவானா இம்பியான், ஜாலான் அராவோனா 2இல் நேற்றிரவு
நிகழ்ந்தது.
எனினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிருடற்சேதம்
ஏற்படவில்லை என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
முகமது ஹாத்தா சே டின் கூறினார்.
இவ்விபத்து நிகழ்ந்த போது அந்த பத்து வயதுச் சிறுவன் தன் தாயாருக்குச்
சொந்தமான டோயோட்டா கொரோலா ரகக் காரில் தன் ஒன்பது வயது
உறவுக்கார சிறுவனுடனுன் பயணித்தது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அச்சிறார்கள் அரோவானா இம்பியான் அடுக்குமாடி குடியிருப்பு
பகுதியிலிருந்து தாமான் அரோவானா நோக்கிச் சென்று கொண்டிருந்த
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டோயோட்டா வேனை மோதியுள்ளது என அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இந்த மோதலின் விளைவாக அந்த வேன் நகர்ந்து முன்னே நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பெரேடுவா கஞ்சில் காரை மோதியது என்றார் அவர்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 39(1) மற்றும் 111 ஆகிய பிரிவு, 1959ஆம் ஆண்டு சாலை
போக்குவரத்து விதிமுறையின் 10வது ஷரத்து மற்றும் 2001ஆம் ஆண்டு
சிறார் சட்டத்தின் 31(1) ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு
வருவதாக அவர் சொன்னார்.


