ஷா ஆலம், செப். 5 - கிள்ளான், பூலாவ் இண்டாவில் உள்ள சுங்கை கெம்புங் படகுத் துறையிலிருந்து தென்கிழக்கே 0.4 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 2.18 மணியளவில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் ஏற்றிய கப்பலை சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (ஏ.பி. எம்.எம்.) தடுத்து வைத்தது.
கடந்த சில நாட்களாக அந்த மணல் கப்பல் சம்பந்தப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனைக்காகக் கடல் ரோந்துப் படகை தாங்கள் அங்கு அனுப்பியதாக சிலாங்கூர் மாநில கடல்சார் இயக்குநர் கடல்சார் கேப்டன் அப்துல் முஹைமின் முஹம்மது சாலே கூறினார்.
இந்த கப்பலில் 30 முதல் 65 வயதுக்குட்பட்ட எட்டு வெளிநாட்டு நபர்கள் பணியில் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.
மேலும் இச்சோதனையில் கப்பலை இந்தோனேசியரான 36 வயது கேப்டன் இயக்கியதோடு அதில் ஒரு இந்தோனேசியப் பணியாளரும் 30 முதல் 65 வயதுடைய ஆறு சீனர்களும் இருப்பது கண்டறியப்பட்டது என்றார் அவர்.
நங்கூரமிடுவதற்கான அனுமதி ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக பூலாவ் இண்டா கடல் போலீஸ் படை படகுத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மலேசிய கடல்சார் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அனுமதியின்றி நங்கூரமிட்டதற்காக 1952ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அப்துல் முஹைமின் கூறினார்.


