ஷா ஆலம், செப் 4: உலக அளவில் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்தவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஏற்றுமதி வணிகத்தில் ஈடுப்பட உதவி வழங்கப்படுகிறது.
சிலாங்கூர் ஏற்றுமதி தினத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் 147 நிறுவனங்களைச் சேர்ந்த 230 தொழில் முனைவோருக்கு தங்களின் சந்தையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளதாக தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
"சவாலான பொருளாதார சூழலில், தொழில் முனைவோர் அதிக முனைப்புடன், புதுமையாகவும் இருக்க வேண்டும். மேலும், இத்திட்டம் வெளிநாட்டு சந்தையில் வெற்றி பெற ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது," என்று அவர் இன்று கூறினார்.
மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (மெட்ராட்) சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த இரண்டாவது பதிப்பு ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்திய பல தொழில்முனைவோருக்கு நஜ்வான் அங்கீகாரம் வழங்கினார்.
மேலும், மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒன்பது தொழில் முனைவோர் இம்மாத மத்தியில் நான்னிங், சீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு வர்த்தகக் கண்காட்சியில் தங்களுக்கான வாய்ப்பை அமைத்து கொள்வார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சிலாங்கூர் ஏற்றுமதி தினம் மாநிலத்தில் வர்த்தகத்தின் அளவையும் மற்றும் ஏற்றுமதி வணிகத்தில் நிறுவனத்தின் ஈடுப்பாட்டை அதிகரிக்கும் என்று ``Matrade`` அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


