அலோர் ஸ்டார், செப் 4: இல்லாத முதலீடுகளால் ஏமாற்றபட்டதன் விளைவாக 76 வயதான ஓய்வு பெற்ற செவிலியர் RM1.9 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளார்.
இது தொடர்பான புகார் நேற்று மதியம் 12.37 மணியளவில் ஜித்ரா காவல் நிலையத்திற்கு கிடைத்ததாகக் கெடா கன்டிஜென்ட் காவல்துறை தலைமையகத்தின் வணிக குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் லோய் யூ லிக் தெரிவித்தார்.
"முன்பு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பணிபுரிந்த மற்றும் இன்னும் திருமணம் ஆகாத அப்பெண், யூடியூப் தளம் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட முதலீட்டைப் பார்த்ததாகக் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர் பின்னர் நிறுவனத்தின் பிரதிநிதியை தொடர்பு கொண்டார். நிறுவனத்தால் இணைய வகுப்பு மூலம் முதலீடு குறித்து விளக்கப்பட்டது," என்று லோய் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண் ஜூன் 17 அன்று 100,000 ரிங்கிட் மூலதனம் செலுத்தியதாகவும் அதன் பிறகு அவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 19 பரிவர்த்தனைகள் மூலம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தியதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மாதத்திற்குள் லாபம் கிடைக்கும் என உறுதி அளித்ததாகவும், வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தத் தொகையையும் இன்னும் பெறாததால் தான் ஏமாற்றப்பட்டதை அப்பெண் உணர்ந்ததாக லோய் கூறினார்.
"விசாரணையில் முதலீடு போலியானது என்றும், சர்வதேச முதலீட்டு நிறுவனமான 'கேபிடல் டைனமிக்' என்ற முதலீட்டுப் பெயரைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது," என்று அவர் கூறினார். மேலும் மோசடி செய்ததற்காகக் குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
– பெர்னாமா


