கோத்தா பாரு, செப். 4 - நேற்று தும்பாட், சபாங் அம்பாட், கம்போங் பெரியோக்கில்
நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது இரு பாகிஸ்தானிய சகோதரர்கள் பாராங் கத்தி தாக்குலுக்கு இலக்காகினர்.
இருபத்தாறு மற்றும் 33 வயதுடைய அவ்விரு பாகிஸ்தானியர்களும்
தங்கள் கடையில் இருந்த போது முகமூடி அணிந்த இரு ஆடவர்கள்
கையில் பாராங் கத்தியுடன் கடையினுள் நுழைந்ததாக தும்பாட் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி முகமது கைரி ஷாபி கூறினார்.
அவ்விரு சகோதரர்களும் அந்த கொள்ளையர்களை எதிர்த்துப்
போராடியதாகவும் அப்போது பாராங் கத்தி பட்டு அவர்களின் கைகளில்
காயம் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தும்பாட் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
தெரிவித்தார்.
அக்கொள்ளையர்கள் புரோட்டோன் சாகா காரில் சம்பவ இடத்திற்கு வந்தது
அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் வழி
தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
அக்காரின் உரிமையாளரைத் தாங்கள் விசாரணைக்காக தேடி வருவதாகக்
கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 384வது
பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


