NATIONAL

போலந்து அமைச்சரின் வருகை இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் - பிரதமர் நம்பிக்கை

4 செப்டெம்பர் 2024, 1:47 AM
போலந்து அமைச்சரின் வருகை இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் - பிரதமர் நம்பிக்கை

கோலாலம்பூர், செப். 4 - போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியின் பணிநிமித்த  வருகை மலேசியா-போலந்து ஒத்துழைப்பை கணிசமாக வலுப்படுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிகோர்ஸ்கி  நேற்று மரியாதை நிமித்தம் தம்மைச் சந்தித்ததாக தனது முகநூல் பதிவில் கூறிய அன்வார், பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், விவசாயம் மற்றும் செம்பனை போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து தங்களின் கலந்துரையாடல் கவனம் செலுத்தியதாகக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2025 ஜனவரி முதல் ஜூன் வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராகப் போலந்தும் அடுத்தாண்டு ஆசியான் தலைவராக மலேசியாவும் பொறுப்பேற்கவுள்ளதை கருத்தில் கொண்டு ஆசியான்-ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த 40 நிமிட சந்திப்பில் உக்ரேன் மற்றும் பாலஸ்தீனத்தில் நிகழும் மோதல்கள் உள்ளிட்ட நெருக்கடி நிறைந்தப் பிரச்சனைகள் குறித்து ஆழமான மற்றும் விரிவான விவாதம் நடைபெற்றது  என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த 2023 டிசம்பரில்  பதவியேற்ற பிறகு சிகோர்ஸ்கி மேற்கொள்ளும் முதல் மலேசியப் பயணம் இதுவாகும். துணைப் பாதுகாப்பு அமைச்சர் பாவேல் க்ஸாவேரி ஜலேவ்ஸ்கி மற்றும் துணை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் மைக்கேல் கொலோட்ஸிஜ்சாக் ஆகியோரும் இப்பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை  மலேசியாவின் எட்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக போலந்து   கடந்தாண்டு இருந்தது.

கடந்த ஜனவரி மற்றும் ஜூலை இடையே போலந்துடனான மலேசியாவின் மொத்த வர்த்தகம் 14.7 விழுக்காடு அதிகரித்து 305  கோடி வெள்ளியாகப் பதிவானது.  கடந்தாண்டின் இதே காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு  266 கோடி வெள்ளியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.