பாலிக் பூலாவ், செப். 3- வங்காளதேச ஆடவர் என நம்பப்படும் ஆடவர்
ஒருவர் அணிந்திருந்த அரச மலேசிய போலீஸ் படையின் (பி.டி.ஆர்.எம்.)
சின்னமும் பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் பெயரும்
பொறிக்கப்பட்ட டி-சட்டை அதிகாரப்பூர்வ பணிகளுக்கானது அல்ல என்று
காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த ஆடவர் அணிந்திருந்த அந்த டி-சட்டை உடற்பயிற்சி மற்றும் கூட்டு
துப்புரவு இயக்கம் போன்ற சமூகப் பணிகளின் போது
பயன்படுத்துவதற்காகக் கடந்த 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது
விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பாராட் டாயா மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிசால் ஜெனாய் கூறினார்.
வங்காளதேச ஆடவர் என சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் பி.டி.ஆர்.எம்.
சின்னமும் ஐ.பி.டி. பாராட் டாயா என்ற எழுத்தும் பொறிக்கப்பட்ட டி-
சட்டையுடன் காணப்படுவதை சித்தரிக்கும் 19 விநாடி காணொளி ஒன்று
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் தங்கள் கவனத்திற்கு வந்ததாக அவர்
சொன்னார்.
இவ்விவகாரத்தை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகக் கூறிய அவர்
அந்த காணொளி தொடர்பில் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என
பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.


