ஷா ஆலம், செப். 3 - எதிர்வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் விதமாக
மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் சேமிப்பில் உள்ள நீரின் அளவை
சிலாங்கூர் அரசு குறைக்கத் தொடங்கியுள்ளது.
லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் ஏற்பாட்டிலான
இந்த நீர் குறைப்பு நடவடிக்கை கடந்த ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி
தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்று அடிப்படை
வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஏழு அணைக்கட்டுகளில் ஆறில் நீரின் அளவு
90 விழுக்காடாகக் குறைக்கப்படும். கிளாங் கேட்ஸ் அணையில் மட்டும்
நீரின் அளவு 85 விழுக்காடாக நிலை நிறுத்தப்படும் என்று அவர்
சொன்னார்.
பருவ நிலை காரணமாக பெய்யக்கூடிய கன மழையை எதிர்கொள்ளும்
விதமாக அணைக்கட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் நீர்
பெருக்கெடுப்பு காரணமாகக் கீழ் நிலைப் பகுதிகளில் வெள்ளம்
ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.
எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படும்
பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் இந்த நீர் வெளியேற்ற
நடவடிக்கை மறு ஆய்வு செய்யப்படும். இவ்வாண்டு டிசம்பர் 15ஆம்
தேதிக்கு முன் அனைத்து அணைக்கட்டுகளிலும் நீர் கையிருப்பு 95
விழுக்காடாகவும் கிளாங் கேட்ஸ் அணைக்கட்டில் 90 விழுக்காடாகவும்
இருப்பது உறுதி செய்யப்படும் என அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அணைக்கட்டுகளிலிருந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை பெங்குருசான்
ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மற்றும் வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் மேற்பார்வையில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


