NATIONAL

வாடிக்கையாளர் சேவைத் தரத்தை மேம்படுத்த சாலை போக்குவரத்து இலாகாவுக்கு உத்தரவு

3 செப்டெம்பர் 2024, 1:54 AM
வாடிக்கையாளர் சேவைத் தரத்தை மேம்படுத்த சாலை போக்குவரத்து இலாகாவுக்கு உத்தரவு

கோலாலம்பூர், செப். 3 -  வாடிக்கையாளர் திருப்திப் பிரச்சனைகள் திறம்பட தீர்க்கப்படுவதை உறுதி செய்ய சாலைப் போக்குவரத்து இலாகா (ஜே பி.ஜே.) தனது சேவைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் வலியுறுத்தியுள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள ஜே.பி.ஜே. தலைமையகத்திற்கு நேற்று திடீர் வருகை புரிந்தப் பின்னர் தனது முகநூல் பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பணி செயல்முறை (வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம்) மிகவும் நீளமானது. காத்திருப்பு நேரத்தைக் குறைக்க பொருத்தமான முறையைக் கண்டறியுமாறு போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் மற்றும் ஜே.பி.ஜே. தலைமை  இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

காத்திருப்புப் பகுதி வாடிக்கையாளர் நட்புறவுச் சூழலுக்கு  ஏற்ப மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். (அங்கு உடைந்த நாற்காலிகள் காணப்படுவதோடு மின்விசிறிகளும் இல்லை).  இவற்றுக்குத் தீர்வு காண இந்த வாரத்துக்குள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.

கடந்த ஆகஸ்டு மாதம்  19ஆம் தேதி தொடங்கி பல மாநிலங்களில்  முகப்பிட நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டிக்கும் ஜே.பி.ஜே.வின் நடவடிக்கையைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டதாக சம்சுல் அஸ்ரி கூறினார்.

இதற்கிடையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக ஜே.பி.ஜே. ஊழியர்கள் வழங்கி வரும் கடின உழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் அனைத்து அரசு துறைகளும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.