ஜோகூர் பாரு, செப் 2: மாநிலத்தில் ஆகஸ்ட் 12 முதல் 26 வரை பல்வேறு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் இரண்டு பெண்கள் உட்பட 11 நபர்களை கைது செய்ததன் மூலம், கொள்ளை மற்றும் வழிப்பறி களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் 'பாலா கும்பலை' வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகக் காவல்துறை நம்புகிறது.
20 முதல் 65 வயதுக்குட்பட்ட அனைவரும் கூலாய், பொந்தியான் மற்றும் மூவாரைச் சுற்றி கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாக செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஏசிபி எம் குமார் தெரிவித்தார்.
நகைகள், பல்வேறு பிராண்டுகளின் கைப்பைகள் மற்றும் பிராண்ட் வாட்ச்கள் உட்பட சுமார் ரிங்கிட் 95,000 மதிப்புள்ள திருட்டுப் பொருட்களை மீட்டதுடன், திருட்டு மற்றும் வழிப்பறி களுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல உபகரணங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்," என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வீட்டிற்குள் நுழைவதற்கு ஆணிகள் மற்றும் உலோகக் கட்டர்களைப் பயன்படுத்தும் முறையுடன் காவலர்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகள் மற்றும் உயர்தர வீடுகளையும் இந்தக் குழு குறிவைக்கிறது என்றார்.
இக்குழு பொதுவாக இரவில் குற்றத்தைச் செய்வதாகவும், வீட்டின் உரிமையாளர்கள் கவனித்து விட்டால், அக்குழு வீட்டில் காணப்படும் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை கொள்ளையடிக்கும் என்றும் குமார் கூறினார்.
குறைந்தது 31 கொள்ளை மற்றும் வழிப்பறிகளை அக்கும்பலின் கைது மூலம் தீர்க்கப்படும் என தனது தரப்பு நம்புவதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும், இப்போது குற்றவியல் சட்டப் பிரிவு 395/397, பிரிவு 457, பிரிவு 411 மற்றும் பிரிவு 414 ஆகியவற்றின் கீழ் மேல் விசாரணைக்காக எதிர்வரும் சனிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- பெர்னாமா


