ஜோகூர் பாரு, நவ. 2- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட
சந்தேகத்தின் பேரில் தாய், மகன் உள்பட ஐவரை போலீசார் கைது
செய்துள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையில் 157,964 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருளும்
பறிமுதல் செய்யப்பட்டது.
விடியற்காலை 1.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 39
முதல் 69 வயது வரையிலான மூன்று ஆடவர்களும் இரு பெண்களும்
கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் கூறினார்.
இங்குள்ள தாமான் பெலாங்கியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்றில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் 4,925 கிராம் ஷாபு, 2.8 கிராம்
கஞ்சா, 1.4 கிராம் கெத்தாமின் மற்றும் இணையம் வழி வாங்கப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் போலி துப்பாக்கி, மூன்று சுண்ணாம்பு தோட்டாக்கள்
ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.
மேலும், இரு கார்களும் 1,385 வெள்ளி ரொக்கமும் இச்சோதனையின்
போது பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், உள்நாட்டுச்
சந்தையில் விநியோகிக்கப்பதற்காகப் போதைப் பொருளை பொட்டலமிடும்
மற்றும் சேமித்து வைக்கும் மையமாக அந்த ஆடம்பர அடுக்குமாடி
குடியிருப்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றார்.
முப்பதேழு வயது நபரின் தலைமையிலான இக்கும்பல் கடந்த ஜூலை
மாதம் முதல் போதைப் பொருள் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டு
வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
கைதான அனைவருக்கும் எதிரான தடுப்புக் காவல் அனுமதி இன்றுடன்
முடிவுக்கு வந்த நிலையில் அவர்களை விசாரணைக்காக இன்று தொடங்கி
மேலும் ஆறு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணை
பெறப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


