கோலாலம்பூர், செப், 2- இங்குள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில உள்வாங்கும் சம்பவத்தில் காணாமல் போன இந்திய பிரஜையான விஜயலட்சுமியைத் தேடி மீட்கும் நடவடிக்கை நிறுத்தப் பட்டதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர்
நேற்றிரவு தாயகம் புறப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவரின் கணவரும் மகனும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக நேற்றிரவு தாயகம் புறப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அப்பாண்டி சுலைமான் கூறினார்.
நேற்று, விஜயலட்சுமி புதையுண்ட இடத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். அவர்களுடன் விஜயலட்சுமியின் சகோதரியும் உடன் இருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில உள்வாங்கும் சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி திடீரென்று புதையுண்டார்
அவர் எட்டு மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்து காணாமல் போனார். அவரைத் தேடி மீட்கும் பணிகள் 9 நாளாக நடந்த நிலையில் தற்போது அப்பணிகள் நிறுத்தப்பட்டன.
விஜயலட்சுமியை மீட்கும் பணி நிறுத்தப்பட்டதால் தற்போது சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலே ஹா முஸ்தாஃபா கூறியிருந்தார்.


