உலு லங்காட், செப். 2 - புனரமைக்கப்படும் சாலைகள் உறுதியானவையாகவும் நீடித்து உழைக்கக்கூடியவையாகவும் இருப்பதை உறுதி செய்ய இம்மாதம் தொடங்கும் மெகா சாலை மறுசீரமைப்பு 2.0 திட்டத்தில் 'ஜெட் பேட்சர்' என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
உயர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இந்த புதிய முறையை அமல்படுத்த 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அடிப்படை வசதி மற்றும் வேளாண் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.
இந்த இரண்டு கோடி வெள்ளி பட்ஜெட் அறிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளதால் அதனை செயல்படுத்தும் முறை குறித்து இந்த வாரம் கூடும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
எங்களிடம் புதிய தொழில்நுட்பம் உள்ளது 'ஜெட் பேட்சர்' எனப்படும் இந்த உயர் தொழில்நுட்பம் சாலைகளில் ஏற்பட்ட குழிகளைப் பழுது பார்ப்பதில் நீடித்த பலனைத் தரக்கூடியது. இதன் தொடர்பான மேல் விவரங்களை நாங்கள் பின்னர் வழங்குவோம் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள சுங்கை லங்காட், டெனாய் சுங்கை கெபாங்சானில் உறிஞ்சலகு மீன்களைப் (ஈக்கான் பண்டாராயா) பிடிக்கும் திட்டத்தைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மாநில அரசின் மெகா சாலை மறுசீரமைப்பு 2.0 திட்டம் கடுமையாக சேதமடைந்த சாலைகளில் கவனம் செலுத்தும் எனக் கூறிய இஷாம், இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய உயர் தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மாநில அரசு கடந்தாண்டு பெரிய அளவிலான சாலை சீரமைப்பு திட்டத்திற்கு ஐந்து கோடி வெள்ளியைச் செலவிட்டது.


