NATIONAL

மஸ்ஜிட் இந்தியா பகுதியைப் புனரமைக்க ஆறு மாதம் பிடிக்கும் - கோலாலம்பூர் டத்தோ பண்டார் தகவல்

2 செப்டெம்பர் 2024, 2:50 AM
மஸ்ஜிட் இந்தியா பகுதியைப் புனரமைக்க ஆறு மாதம் பிடிக்கும் - கோலாலம்பூர் டத்தோ பண்டார் தகவல்

கோலாலம்பூர், செப். 2 - இங்குள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட

நில அமிழ்வுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை புனரமைக்க மூன்று

முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும் என்று கோலாலம்பூர் டத்தோ

பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமது ஷாரிப் கூறினார்.

விஸ்மா யாக்கின் தொடங்கி ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் போலீஸ்

சாவடி அமைந்துள்ள இடம் வரையிலான 200 மீட்டர் பகுதியை இந்த

புனரமைப்பு மற்றும் மறுநிர்மாணிப்புப் பணிகள் உள்ளடக்கியிருக்கும் என்று

அவர் சொன்னார்.

சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் பூமிக்கு அடியில்

பதிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மீதான ஆய்வுகளை

மேற்கொள்வதற்கும் ஏதுவாக அப்பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது

என்று அவர் குறிப்பிட்டார்.

பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள இண்டா வாட்டர் குழுமம் மற்றும் ஆயர்

சிலாங்கூர் பெர்ஹாட் குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதைக்

கண்டறிய அதிக கால அவகாசம் தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதே சமயம் நிலத்தடி கேபிள்களின் நிலை குறித்து அறிந்து

கொள்வதற்காக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியும்

நாடப்பட்டுள்ளது. இச்சம்பவ இடத்தில் நிலத்தின் தன்மை தொடர்பான நுட்ப

அறிக்கையை கனிம வள மற்றும் புவி அறிவியல் துறை வழங்கும் என

அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25ஆம் தேதி

அமைக்கப்பட்ட சிறப்புச் செயல்குழு அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து

விவாதிப்பதற்காக இன்று கூட்டத்தை நடத்தும் என்றார் அவர்.

இச்சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வணிகர்கள் வழக்கம் போல்

தங்கள் வர்த்தக நடவடிக்கைளை மேற்கொள்ளலாம் என்றும் எனினும், காவல் துறையினர் கட்டியுள்ள மஞ்சள் நாடாவை அவர்கள் மீறக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

மஸ்ஜிட் இந்தியாவில் தரை திடீரென உள்வாங்கிய சம்பவத்தில் சிக்கி

ஜி.விஜயலட்சுமி (வயது 48) என்ற மாது காணாமல் போனார். கடந்த

ஒன்பது நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் மற்றும் மீட்பு பணி

நேற்றுடன் நிறுத்தப்படுவதாகப் பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு

பிரதேசம்) டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.