ஷா ஆலம், செப். 2- கிள்ளான், மேற்கு துறைமுகத்தில் லோரி ஒன்று
கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த சம்பவத்தில் காணாமல் போன
ஆடவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
இருபத்து நான்கு வயதான வான் ஹபிஷ் அப்துல் சலாம் என்ற அந்த
ஆடவரின் உடல் சம்பவ இடத்திலிருந்து 20 மீட்டர் தொலைவில் சுமார் 13
மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான்
இஸ்மாயில் கூறினார்.
முகமது ஹபிஷ் கடந்த 2021 டிசம்பர் 21ஆம் தேதி முதல் அங்கு
டெர்மினல் டிராக்டர் நடத்துநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது உடல்
கரைக்கு கொண்டு வரப்பட்டு மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரி ஒன்று முன்னோக்கி அதிவேகத்தில்
விரைந்து தடுப்புச் சுவரை மோதி கடலில் விழுந்ததாகச் சம்பவத்தை நேரில்
கண்டவர்கள் கூறினர்.


