கோலாலம்பூர், செப் 2 - மியன்மாரில் நிகழும் மனித கடத்தலில் அரசியல்வாதி மற்றும் அவரது கணவருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுவது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 'டத்தோஸ்ரீ' அந்தஸ்து கொண்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பில் இதுவரை அரசியல்வாதி மற்றும் அவரின் கணவர் உட்பட மூன்று நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்தார்.
நாங்கள் தற்போது மேலும் ஒரு நபரை விசாரணைக்காகத் தேடி வருகிறோம். மேலும் இந்த மனிதக் கடத்தல் தொடர்பாக கட்டுரைகளை எழுதிய மூன்று எழுத்தாளர்களையும் விசாரணைக்கு அழைப்போம் என அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் 2007ஆம் ஆண்டு ஆள்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டப் பிரிவு 12 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மியன்மாரில் செயல்படும் அனைத்துலக மனித கடத்தல் கும்பலின் மூளையாக முன்னாள் துணை அமைச்சரான ஒரு அரசியல்வாதி இருப்பதாக கடந்த புதன்கிழமை (ஆகஸ்டு 28) தகவல் வெளியானது.
கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மனிதக் கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் ஒரு நிறுவனத்தில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளாக அந்தப் பெண்ணும் அவரின் கணவரும் பதவி வகித்து வருவதாக நம்பப்படுகிறது என்று மலேசிய அனைத்துலக மனிதாபிமான அமைப்பின் பொதுச் செயலாளர் டத்தோ ஹிஷாமுடின் ஹாஷிம் கூறியிருந்தார்.
சமீபத்தில், மியன்மாரில் மனிதக் கடத்தலை அம்பலப்படுத்தும் காணொளி இந்தோனேசியாவில் யூடியூப்பில் வைரலானது. மனித கடத்தல் கட்டாய உழைப்பு, சித்திரவதை, உடல் உறுப்பு கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட
நடவடிக்கைகளில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ள இக்கும்பலின் மோசடிக்குப்
பல இந்தோனேசிய குடிமக்கள் பலியாகியுள்ளனர்.


