ஜோர்ஜ் டவுன், ஆக. 30 - பினாங்கு மாநிலத்தில் இம்மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் டெலிகோம் மலேசிய (டி.எம்.) நிறுவனத்திற்கு சொந்தமான கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபது முதல் 52 வயது வரையிலான அந்த சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்ததன் மூலம் பாராட் டாயா, செபராங் பிறை உத்தாரா, செபராங் பிறை செலாத்தான் மாவட்டங்களில் நிகழ்ந்த குறைந்தது எட்டு கேபிள் திருட்டு சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.

மாநிலத்தில் நிகழ்ந்த கேபிள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து இம்மாதம் முழுவதும் மாநில போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு பொருள்களையும் கைப்பற்றினர் என்று அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 379 வது  பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை பினாங்கு மாநிலத்தில் கேபிள் திருட்டு தொடர்பில் 50 புகார்கள் கிடைக்கப் பெற்றதாக கூறிய அவர், இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 77 பேர் கைது செய்யப்பட்டு 33 சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே, பினாங்கு மாநில போலீசார் மேற்கொண்ட மற்றொரு சிறப்பு சோதனை நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 24 முதல் 66 வயது வரையிலான 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று டத்தோ ஹம்சா குறிப்பிட்டார்.