கோலாலம்பூர், ஆக. 30 - முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினுக்கு எதிரான ஜானா விபாவா திட்டம் சம்பந்தப்பட்ட 23 கோடியே 25 லட்சம் வெள்ளி லஞ்ச வழக்கை செப்டம்பர் 27ஆம் நாள் நடத்துவதற்கு செஷன்ஸ் நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.
தனக்கு எதிரான நான்கு அதிகார துஷ்பிரயோக வழக்குகளை நிலைநிறுத்தும் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி பெர்சத்து கட்சியின் தலைவரான மொகிடின் செய்து கொண்ட மனு மீதான முடிவை அறிவிக்கும் தேதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் மறு நிர்ணயம் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் சேட்டன் ஜெத்வானி நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி அசுரா அல்வி இத்த தேதியை நிர்ணயித்தார்.
இந்த மறுஆய்வு மீது ஆகஸ்ட் 20 ஆம் நாள் தீர்ப்பு வழங்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தேதி குறித்திருந்தது. முடிவை எடுத்தது. ஆனால் இது பின்னர் செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது, மொகிடின் சார்பில் சேத்தன் ஆஜரானார். அதே சமயம் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருடின் வான் லாடின் ஆஜரானார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமது ஜமில் ஹூசேன், நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் மொகிடினை விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
இருப்பினும், இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்தது. பிப்ரவரி 28ஆம் தேதி இந்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் டத்தோ ஹடாரியா சைட் இஸ்மாயில், டத்தோ அஸ்மி அரிஃபின் மற்றும் டத்தோ எஸ்.எம். கோமதி சுப்பையா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு மொகிடினுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளையும் மீண்டும் நிலைநிறுத்த உத்தரவிட்டதோடு இந்த வழக்கை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் திரும்ப நடத்தும்படியும் பணித்தது.
இருப்பினும், இந்த முடிவை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த மார்ச் 27 ஆம் தேதி மறு செய்த மொகிடின், 1964ஆம் ஆண்டு நீதித்துறைச் சட்டத்தின் 50(1)வது பிரிவின் கீழ் தேவைப்படும் அதிகார வரம்பு இல்லாமல் செய்யப்பட்ட காரணத்தால் இந்த தீர்ப்பு செல்லாது என வாதிட்டார்.


