(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஆக. 30 - நாட்டின் 67வது தேசிய தினத்தை முன்னிட்டு
கோத்தா டாமன்சாரா தொகுதி இந்திய சமூகத் தலைவர் தேவி
முனியாண்டி ஏற்பாட்டில் மூன்று இடங்களில் சிறார்களுக்கான சிறப்பு
நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
கம்போங் பாரு சுங்கை பூலோ ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தில்
இம்மாதம் 16ஆம் தேதியும் சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ., எல்ஜிஎம். ஸ்ரீ மகா
வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் 23ஆம் தேதியும் சுபாங், யு5, தாமான்
முத்தியாரா, அவால் இல்மு பாலர் பள்ளியில் கடந்த 28ஆம் தேதியும்
இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்த மூன்று இடங்களிலும் நடைபெற்ற தேசிய தின நிகழ்வுகளில்
கலந்து கொண்ட பாலர் பள்ளி, ஆரம்ப பள்ளி மற்றும் இடை நிலைப்
பள்ளிகளைச் சேர்ந்த 155 மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள்,
கோப்புகள், இனிப்பு வகைகள் மற்றும் தேசியக் கொடி வழங்கப்பட்டதாகத்
தேவி குறிப்பிட்டார்.
ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா வனதுர்க்கை
அம்மன் ஆலயங்களில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கோத்தா
டாமன்சாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸூவான் அகமது
காசிம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப் பொருள்
பொட்டலங்களை எடுத்து வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றை விதைக்கும் அதே நேரத்தில்
தேசிய தினக் கொண்டாட்ட மகிழ்ச்சியில் அவர்களும் பங்கு பெறுவதை
உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு
மாணவர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாக அவர் கூறினார்.


