கோலாலம்பூர், ஆக. 30 - மடாணி அரசாங்கம் கொண்டுள்ள கொள்கை
இந்நாட்டில் இருக்கும் ஏழ்மை நிலையிலுள்ள தரப்பினரின் நலனைப்
புறக்கணிக்காது என்று பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.
இங்குள்ள தாமான் டேசாவில் உருவாக்கப்படும் ரெஸிடென்சி சூரியா
மடாணி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சுட்டிக்
காட்டிய அவர், குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் மாநகரில்
வசிப்பதற்குரிய உகந்த சூழலையும் வாய்ப்பினையும் இந்த வீடமைப்புத்
திட்டம் ஏற்படுத்தித் தரும் என்றார்.
இந்த திட்டத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் 45 நாட்களில்
அனுமதியை வழங்கியது. சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி இப்போது
வரை இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இதற்கு
முன்னர் இத்தகைய அனுமதியைப் பெறுவதற்கு எட்டு மாதம் முதல்
ஓராண்டு இரண்டு மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும்.
மேம்பாட்டு நிறுவனங்கள் புவியியல் தொழில்நுட்ப ஆய்வு, சுற்றுச்சூழல்
விளைவு மீதான ஆய்வுகளையும் இதர நிபந்தனைகளையும் முறையாக
மேற்கொண்டிருந்தால் அனுமதியை விரைந்து வழங்க முடியாது
என்பதற்கு எந்த காரணமும் கிடையாது என்று அன்வார் சொன்னார்.
குறுகிய காலத்தில் திட்டத்தை ஆக்ககரமான முறையில் அமல்படுத்த
முடியும் என்பதை நிரூபித்துள்ளது குறித்து நான் இறைவனுக்கு நன்றி
கூறுகிறேன். இரண்டு லட்சம் வெள்ளிக்கும் குறைவான விலையில்
மடாணி மக்கள் வீடமைப்புத் திட்டத்தை தாமான் டேசாவில் அமைக்கும்
போது அருகிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு
இணையான இடத்தைப் பெறுகிறோம் என்றார் அவர்.
இன்று இங்குள்ள பாகான் செராயில் நடைபெற்ற கிரியான் ஒருங்கிணைந்த பசுமைத் தொழிலியல் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.


