(ஆர்.ராஜா)
கிள்ளான், ஆக. 30 - செந்தோசா தொகுதி நிலையிலான 67வது தேசிய தினக்
கொண்டாட்டம் இங்குள்ள கிளாங் ஜெயா எம்.பி.டி.கே. திடலில் (இக்கேடா
பீஸ் பார்க்) நாளை ஆகஸ்டு 31ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணி
தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
செந்தோசா தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வில்
பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்து சுமார் 600 பேர் அணிவகுப்பு
மற்றும் இதர நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர் என்று தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
இந்த தேசிய தினத்தின் சிறப்பு அங்கமாக மெர்டேக்கா ஃபன் ரன்,
சிறார்களுக்கான நடவடிக்கைகள் மற்றும் சீருடை அணிவகுப்பு உள்ளிட்ட
நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய சமூகத்திற்கான
மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் நாட்டுப்
பற்றையும் பல்லின மக்கள் ஒரே குடும்பமாக இணைந்து செயல்படுவதன்
முக்கியத்துவத்தையும் உணர்த்தும் நோக்கிலான இந்த தேசிய தின
நிகழ்வில் தொகுதி மக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமாய் அவர்
கேட்டுக் கொண்டார்.


