குவாந்தான், ஆக. 30 - பெந்தோங் நகரில் உள்ள பல்பொருள் விற்பனைக்
கடை ஒன்றின் ஊழியரை கவசத் தொப்பியால் தாக்கி காயப்படுத்தியதாக
சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மற்றும்
பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் 27 முதல் 36 வயது
வரையிலான அம்மூவரும் நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் பெந்தோங்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைஹாம் முகமது கஹார்
கூறினார்.
கைதான மூன்று சந்தேகப் பேர்வழிகளில் இருவருக்கு எதிராக போதைப்
பொருளை தவறாகப் பயன்படுத்தியது உள்பட பல்வேறு முந்தையக்
குற்றப்பதிவுகள் உள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என அவர்
சொன்னார்.
பின்னிரவு 12.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு கருத்து
வேறுபாடு மற்றும் வாய்த் தகராறு காரணமாக இருந்துள்ளதை தொடக்கக்
கட்ட விசாரணை முடிவுகள் காட்டுகின்றன. இந்த சம்பவத்தில்
காயமடைந்த 19 வயது உள்நாட்டு ஆடவர் சிகிச்சைக்காகப் பெந்தோங்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றார் அவர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 324வது
பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை
ஒன்றில் கூறினார்.


