அங்காரா, ஆக 30 - போலியோ வைரஸுக்கு எதிரான முக்கியமான தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் மனிதாபிமான தற்காலிக போர்நிறுத்தத்தை அமல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் (இ.யூ.) கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாகப் போலியோ இல்லாத பிராந்தியமான காஸாவில் தற்போது அந்நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது. தடுப்பூசி பிரச்சாரங்கள் தொடரப்படுவதை உறுதி செய்வதற்காக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை ஏற்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்று அனடோலு ஏஜென்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
காஸாவில் வரும் வாரங்களில் 640,000 க்கும் மேற்பட்ட சிறார்களை குழந்தைகளை இலக்காக கொண்டு இரண்டு சுற்று தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிடுகிறது.
மேலும், இந்த அவசர பிரச்சாரத்தை வெற்றிகரமாகவும் சரியான நேரத்திலும் செயல்படுத்துவதை உறுதி செய்ய மனிதாபிமான போர் நிறுத்தம் அவசியம் தேவை என்று அந்த அமைப்பு வலியுறுத்தியது.
கடந்த 25 ஆண்டுகளில் இப்பிராந்தியத்தில் முதல் போலியோ நோய்ப் பரவலை உறுதிப்படுத்தும் காஸா சுகாதார அமைச்சின் சமீபத்திய அறிவிப்பு, இந்த தடுப்பூசித் திட்டத்திற்கான அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
டெய்ர் அல்-பாலா நகரில் 10 மாத குழந்தை சம்பந்தப்பட்ட சம்பவம், தடுப்பூசி போடப்படாததால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் சுட்டிக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
இந்த நோய் முக்கியமாக ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களைப் பாதிக்கிறது. 200 பேரில் ஒருவருக்கு ஒன்றில் மீளமுடியாத பக்கவாதத்தை நோய்த்தொற்று ஏற்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் 40,400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 93,600 க்கும் அதிகமானோர் காயம் அடைந்த இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல் தொடரும் நிலையில் காஸாவில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


