கோலாலம்பூர், ஆக. 30 - எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய்க்கான
வைரஸை கண்டறியும் சோதனைக் கருவிக்கு மருத்துவ உபகரண அதிகார
முகமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மலேசிய சந்தையில்
அறிமுகப்படுத்தப்படும் முதலாவது கருவியான இது அந்நோய்க்கான
வைரஸ்களை கண்டறிவதில் பெரிதும் துணை புரியும் என
கருதப்படுகிறது.
வியாஷூவர் மங்கிபாக்ஸ் நிகழ்நேர பிசிஆர் கண்டறிதல் கருவி
எனப்படும் இந்த சாதனத்தை லைசென்ஸ் பெற்ற மருத்துவர்கள் போன்ற
நிபுணர்கள் மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர சாதாரண பொது மக்கள்
அல்ல என்ற எம்.டி.ஏ. நிர்வாகத் தலைவர் டாக்டர் முரளிதரன்
பரமேஸ்வரா கூறினார்.
இந்த கருவியை மருந்தகம், மளிகைக் கடை மற்றும் இணைய வர்த்தகத்
தளங்களில் விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய தடை
விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அவ்வாறு செய்வது 2012ஆம் ஆண்டு
மருத்துவ உபகரண சட்டத்தின் (சட்டம் 737) கீழ் குற்றமாகும் எனத்
தெரிவித்தார்.
ஆகவே, எம்பாக்ஸ் நோய் சோதனையை சொந்தமாக மேற்கொள்வதற்காக
இந்த உபகரணத்தை வாங்கவோ பயன்படுத்துவோ வேண்டாம் என்று
பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த உபகரணத்தை மருந்தகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் இணைய
வர்த்தக தளங்கள் மூலம் விற்பனை செய்வதைக் கண்டால் அது குறித்து
என்ற femes.mda.gov.my அகப்பக்கம் வாயிலாக எம்.டி.ஏ. நிரவாகத்திடம் புகார்
அளிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வாண்டில் இது வரை 33 குரங்கம்மை என சந்தேகிக்கப்படும் நோய்
சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம்
கூறியிருந்தது.
அவற்றில் 32 சம்பவங்கள் மீதான சோதனையில் எதிர்மறையான
முடிவுகள் வந்த வேளையில் மேலும் ஒரு சம்பவம் தொடர்பான
சோதனை முடிவுக்கு அமைச்சு காத்திருக்கிறது.


