கோலாலம்பூர், ஆக. 29 - பினாங்கு, சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்கள் கோலாலம்பூருடன் இணைந்து 2027 சீ விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.
70 கோடி வெள்ளியை எட்டும் என மதிப்பிடப்படும் இந்த போட்டிகளுக்கான செலவை ஏற்க மூன்று மாநிலங்களும் ஒப்புக்கொண்டதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
இந்த மதிப்பீடு கடந்த 2017ஆம் ஆண்டு சீ போட்டியை நாங்கள் ஏற்பாடு செய்தபோது உண்டான செலவினத்தை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, மாநில அரசுகளிடமிருந்து எங்களுக்கு ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதனால் மத்திய அரசு அதிகம் செலவிட வேண்டியதில்லை. அதனால்தான் சீ விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டது என அவர் குறிப்பிட்டார்.
சீ போட்டிக்கான ஏற்பாட்டுச் செலவுகளில் 50 சதவீதத்தை ஈடுகட்ட சரவாக் ஒப்புக்கொண்டது. இது 30 கோடி வெள்ளிக்கும் அதிகமான தொகையை பிரதிபலிக்கிறது. சபா 10 கோடி வெள்ளியையும் பினாங்கு 1.5 கோடி வெள்ளியையும் வழங்கும் என்றார் அவர்.
இன்று இங்குள்ள தேசிய விளையாட்டு மன்றத்தில் நடைபெற்ற தெனாகா மலேசியா எனர்ஜி எழுத்தறிவுத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
2027ஆம் ஆண்டு சீ போட்டியை ஏற்று நடத்துவதற்கான தென்கிழக்கு ஆசிய விளையாட்டு சம்மேளனத்தின் பரிந்துரையை மலேசியா ஏற்றுக்கொண்டதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு நேற்று அறிவித்தது.
இந்தப் போட்டியை கூட்டாக ஏற்று நடத்த சரவாக், சபா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்கள் வழங்கிய உறுதிமொழியை கருத்தில் கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.


