கோலாலம்பூர், ஆக. 29 - புதிய மடாணி வீடமைப்புத் திட்டங்களில் பசுமைப் பகுதிகள், பொழுதுபோக்கு மற்றும் அத்தியாவசிய வசதிகள் இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பொது வசதிகளில் சிறு வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கான மடாணி கடைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் பிரிவினருக்கான ஒவ்வொரு வீடமைப்புத் திட்டமும் வசதியானதாக இருக்க வேண்டும். அதாவது சிறிது பசுமைப் பகுதி, பெரியதாக இல்லாவிட்டாலும் - குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், சமூகத்திற்கான ஒரு மண்டபம் மற்றும் வழிபாட்டு இல்லம் இருக்க வேண்டும்.
இவை, மேம்பாட்டாளர்களால் கட்டாயம் அமைக்கப்பட வேண்டிய சில அவசியமான தேவைகளாகும் என்று இன்று தாமான் டேசாவில் நடைபெற்ற ரெசிடென்சி சூரியா மடாணி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றும் போது அவர் கூறினார்.
இந்நிகழ்வில் பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தலைநகரில் உள்ள ஒவ்வொரு மடாணி வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றமும் கூட்டரசு பிரதேசத் துறை துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் அவ்வப்போது வழங்கப்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.


