கோலாலம்பூர், ஆக. 29 - பத்து பூத்தே தீவு தொடர்பான அரச விசாரணை
மன்றத்தின் அறிக்கை (ஆர்.சி.ஐ.) நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்படவுள்ள வேளையில் அதன் தொடர்பில் விவாதம்
நடத்துவதற்கும் பரிந்துரைக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர்
(சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான்
கூறினார்.
பத்து பூத்தே, மிடல் ரோக் மற்றும் சவுத் லெட்ஜ் தீவுகளின்
இறையாண்மை தொடர்பான அந்த அரச ஆணையத்தின் விசாரணை
அறிக்கையை ஆர்.சி.ஐ. தலைவரும் முன்னாள் தலைமை நீதிபதியுமான
துன் முகமது ராவுஸ் ஷாரிப் நேற்று அமைச்சரவையில் தாக்கல்
செய்ததாக அவர் சொன்னார்.
ராவுஸ் மற்றும் மற்றும் ஆர்.சி.ஐ. உறுப்பினர்கள் இந்த விசாரணை
அறிக்கையை இஸ்தானா நெகாராவில் தம்மிடம் வழங்கியதாக பேரரசர்
சுல்தான் இப்ராஹிம் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
பத்து பூத்தே தொடர்பில் உடனடியாக விசாரணை ஆணையத்தை அமைக்க
மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புக் கொண்டதாகப் பிரதமர் துறையின் சட்ட
விவகாரப் பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தது.
இந்த அரச விசாரணை ஆணையம் 1950ஆம் ஆண்டு அரச விசாரணை
ஆணையச் சட்டத்தின் (சட்டம் 119) கீழ் அமைக்கப்பட்டது.
பத்து பூத்தே தீவு சிங்கப்பூரின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றும்
சுமார் ஒரு கிலோ மீட்டர் அப்பால் உள்ள மிடல் ரோக் மலேசியாவுக்குச்
சொந்தமானது என்றும் அனைத்துலக நீதிமன்றம் கடந்த 2008ஆம் ஆண்டு
மே மாதம் 23ஆம் தேதி தனது தீர்ப்பில் கூறியிருந்தது.


