கோலாலம்பூர், ஆக. 29 - பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர்
டான்ஸ்ரீ மொகிடின் யாசினுக்கு எதிராக நிந்தனைச் சட்டத்தின் கீழ்
எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையை அரசியல் லாபம் தேடுவதற்குப்
பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
வலியுறுத்தினார்.
மொகிடின் வெளியிட்டதாகக் கூறப்படும் நிந்தனைக்குரிய கருத்து
தொடர்பில் காவல் துறை பகாங் அரண்மனையிடமிருந்து நேரடியாகப்
புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
அந்த புகாரை செய்தது பகாங் அரண்மனைத் தரப்பாகும். ஆகவே அவர்
(மொகிடின்) இதனை அரசியலாக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
அவர் சட்டத்தை மீறியதோடு வரம்பை மீறியும் செயல்பட்டுள்ளார்.
ஆகவே, அதற்கான விளைவுகளை அவர் எதிர்கொண்டாக வேண்டும்.
இதன் தொடர்பில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார்
நடவடிக்கை எடுத்தனர். தேசிய போலீஸ் படைத் தலைவர் கூட இதன்
தொடர்பில் தொடர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார் அவர்.
மொகிடின் யாசினுக்கு எதிராக நிந்தனைச் சட்டத்தை பயன்படுத்திய
அன்வாரும் பக்கத்தான் ஹராப்பான் தலைவர்களும் கபடவேடதாரிகள்
என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்
குற்றஞ்சாட்டியிருந்த து தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
அன்வாரும் பக்கத்தான் ஹராப்பானும் பதவிக்கு வந்தது முதல் அரசியல்
எதிர்ப்பாளர்களுக்கு நெருக்குதல் கொடுப்பதற்கும் அவர்களை
ஒடுக்குவதற்கும் தொடர்ச்சியாகவும் கொடூரமான முறையிலும் நிந்தனைச்
சட்டத்தை பயன்படுத்தி வருவதாக ஹம்சா தனது பேஸ்புக் பக்கத்தில்
குற்றஞ்சாட்டியிருந்தார்.
கடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி நடைபெற்ற கிளந்தான் மாநிலத்தின் நெங்கிரி
தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிந்தனைக்குரிய
கருத்துகளை வெளியிட்டதாக மொகிடின் மீது குவா மூசாங் செசன்ஸ்
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டப்பட்டது.


