NATIONAL

மலேசிய தமிழ்க் கலைஞர்களின் நலன் காக்கும் ஐந்து திட்டங்கள்- துணையமைச்சர் தியோ அறிவித்தார்

28 ஆகஸ்ட் 2024, 5:10 AM
மலேசிய தமிழ்க் கலைஞர்களின் நலன் காக்கும் ஐந்து திட்டங்கள்- துணையமைச்சர் தியோ அறிவித்தார்

செய்தி .ஆர்.ராஜா

கோலாலம்பூர், ஆக. 28- இந்நாட்டிலுள்ள தமிழ்க் கலைஞர்களின் நலன் காக்கும் ஐந்து திட்டங்களை தகவல் தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் அறிவித்தார்.

மலேசிய நாடாளுமன்ற மக்களவை, மேலவை மற்றும் சட்டமன்ற இந்திய உறுப்பினர்களுடன் நேற்று தமது அலுவலகத்தில் நடத்திய சந்திப்பின் போது இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

படைப்பாற்றல் உள்ளடக்க நிதி 2024, தாளம் திட்டம், வானொலியில் உள்நாட்டு பாடல்களுக்கு கூடுதல் வாய்ப்பு, உள்நாட்டு தமிழ்க் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி மற்றும் ‘ஏஸ் வேர்க்சோப்‘ எனும் பயிற்சிப் பட்டறை ஆகியவையே அந்த ஐந்து திட்டங்களாகும் என அவர் விவரித்தார்.

2024 படைப்பாற்றல் உள்ளடக்க நிதித் திட்டத்திற்கு ஃபினாஸ் வாயிலாக 1 கோடியே 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், படைப்பாற்றல் மேம்பாட்டு நிதி, முதன் முறை அமெச்சூர் படத்தயாரிப்பு , டிவி நிகழ்ச்சி நிதி, நாட்டுணர்வு ஆவணப் பட நிதி மற்றும் கோ-புரோ நிதி என அந்த ஒதுக்கீடு ஐந்து பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி திறக்கப்படும்  என்றும் அவர் சொன்னார்.

தாளம் திட்டம் குறித்து குறிப்பிட்ட அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் இந்த தாளம் நிகழ்ச்சிக்கான பதிவு நடைபெறும். என்றார். இந்த ஆறு மாநிலங்களில் உள்ள கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கு உரிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தித் தரும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், மின்னல் எஃப்.எம். வானொலியில் தற்போது வாரம் 7 மணி 30 நிமிடங்களாக இருக்கும்  உள்நாட்டு பாடல்களின் ஒலிபரப்பு நேரம் வரும் நவம்பர் முதல் தேதி தொடங்கி 16 மணி 45 நிமிடங்களாக அதிகரிக்கப்படும் என்றார் அவர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பயிற்சியைப் பொறுத்த வரை அடுத்தாண்டு மேலும் இரு பயிலரங்கங்களும் ஒரு பயிற்சிப் பட்டறையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

மை கிரியேட்டிவ் வென்ச்சர்ஸ் ஏற்பாட்டிலான ஏஸ் வேர்க்சோப் பயிற்சிப் பட்டறை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஆறு இடங்களில் நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் மத்தியில் திறக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

துணை அமைச்சருடனான இந்த சந்திப்பில் செனட்டர் டத்தோ டாக்டர் ஆர். நெல்சன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துளசி, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.