சுங்கை சிப்புட், ஆக. 27- பூர்வக்குடி சிறுமியான நுரைனா ஹுமைரா ரோஸ்லியை இம்மாதம் 16ஆம் தேதி கொலை செய்ததாகப் பதின்ம வயது இளைஞர் ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
தனது உறவினரான அப்பெண்ணை கொலை செய்தது தொடர்பில் தமக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக 17 வயதான அந்த இளைஞர் தலையை அசைத்தார்.
எனினும் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்டு 16 ஆம் தேதி பிற்பகல் 2.30 மற்றும் மாலை 5.00 மணிக்கு இடையே இங்குள்ள கம்போங் பெர்சா போஸ் குவாலா மு என்ற சதுப்பு நிலப்பகுதியில் 10 வயது நூரைனா ஹுமைராவைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை, மரண தண்டனை விதிக்கபடாத பட்சத்தில் குறைந்தபட்சம் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12க்கும் குறையாதப் பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை துணை அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.வித்தியேஸ்வரி நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. கொலை வழக்கு என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
நூரைனா ஹுமைரா அந்தச் சிறுமி கடந்த 16 ஆம் தேதி காணாமல் போனதாகப் புகார் கூறப்பட்டது. மறுநாள் மாலை அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சதுப்பு நிலத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


