குவா மூசாங், ஆக. 27- அண்மையில் நடைபெற்ற நெங்கிரி இடைத்
தேர்தல் பிரச்சாரத்தின் போது நிந்தனைக்குரிய வார்த்தைகளைப்
பிரயோகித்ததாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினுக்கு
எதிராக இங்குள்ள செஷசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நிக் முகமது தர்மிஸி நிக் முகமது சுக்ரி முன்னிலையில் தமக்கு
எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 77 வயதான மொகிடின் மறுத்து
விசாரணை கோரினார்.
இங்குள்ள டேவான் பக்தி பெல்டா பெராசு அருகிலுள்ள காலி இடத்தில்
கடந்த ஆகஸ்டு 4ஆம் தேதி இரவு 10.30 மணிக்கும் 11.50 மணிக்கும்
இடையே நிந்தனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகப்
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான மொகிடினுக்கு
எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 222 நாடாளுமன்ற
உறுப்பினர்களில் 115 பேரின் ஆதரவு தமக்கு இருந்த போதிலும் பிரதமராகப்
பதவியேற்பதற்கு தம்மை அப்போதைய பேரரசர் அழைக்கவில்லை என்று
அவர் கூறியிருந்தார்.
மொகிடினுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)(பி)
பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 4(1)வது துணைப் பிரிவின் கீழ்
குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம்
நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5,000 வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம்
அல்லது மூன்று ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது
இரண்டுமே விதிக்கப்படலாம்.
அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் டத்தோ உமார் சைபுடின் ஜாபர்
தலைமையிலான குழு வழக்கை நடத்தும் வேளையில் மொகிடின் சார்பில் அமீர் ஹம்சா அர்ஷாட், சேத்தன் ஜெத்வானி, டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான், முகமது நாசீர் அப்துல்லா, மாரியானா மாட் குடின் ஆகிய ஐந்து வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.
மொகிடினை 5,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க உமர் சைபுடின்
பரிந்துரைத்தார். எனினும், இதே சட்டப்பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்ட
முந்தைய வழக்குகளில் அபராதமாக 5,000 வெள்ளி மட்டுமே
விதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் அமீர் ஹம்சா, ஜாமீன்
தொகையை நீதிமன்றம் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஒரு நபர் உத்தரவாதத்துடன் 5,000 வெள்ளி ஜாமீனில் மொகிடினை
விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, வழக்கின் மறு விசாரணையை
எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


