ஷா ஆலம், ஆகஸ்ட் 27: சிலாங்கூர் முழுவதும் உள்ள அனைத்து ஆபத்து அவசர கால தற்காலிக தங்கும் மையங்களும் (பிபிஎஸ்) நல்ல நிலையில் மற்றும் வசதியாக இருப்பதை உறுதி செய்ய, ஆய்வு செய்யப்படுகின்றன.
தற்காலிக தங்கும் மையங்கள் சில மோசமான நிலையில் உள்ளதால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லாதிருப்பதால் அவை மீதான மறு மதிப்பீடு தேவை என சமூக நல ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.
"சமீபத்தில், மெர்பாவ் செம்பாக் தற்காலிக தங்கும் மையத்தின் கூரையில் கசிவு ஏற்பட்டுள்ளது மற்றும் கழிப்பறை சேதமடைந்துள்ளதை அதன் உபயோகத்தின் போது கண்டறியப் பட்டது.
எனவே, இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பிபிஎஸ்யில், குறிப்பாக உள்கட்டமைப்பு தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்வதாக கூறினார்.
ஐ.எல்.எஸ்.சி பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக சிலாங்கூரில் வெள்ளத்திற்கு முன் ஏற்பாடாக 1,152 தற்காலிக தங்கும் மையங்கள் அரசாங்க பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளதை பேரிடர் மேலாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.


