NATIONAL

பூமி உள்வாங்குதல் அபாயத்தைத் தணிக்க நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவீர்-  மாநகர் மன்றத்திற்கு  உத்தரவு

27 ஆகஸ்ட் 2024, 2:17 AM
பூமி  உள்வாங்குதல் அபாயத்தைத் தணிக்க நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவீர்-  மாநகர் மன்றத்திற்கு  உத்தரவு

புத்ராஜெயா, ஆக. 27- பூமி  உள்வாங்குதல்   அபாயங்களை மதிப்பிடுவதற்கும் குறைப்பதற்கும் ஏதுவாக புவியியல் வல்லுநர்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிபுணர்களுடன் இணைந்து  பணியாற்றும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்சனையைச் சமாளிப்பதற்கான உடனடி மற்றும் நீண்ட கால வியூகங்களைக்  கண்டறிவதாகக் கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ மைமூனா முகமது ஷெரீப்புடன்  தாம்  தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாகப் பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜாலிஹா முஸ்தாபா கூறினார்.

பூமி  உள்வாங்குதல் சம்பவங்களை திறம்பட குறைக்க கோலாலம்பூரில் நகர்ப்புற திட்டமிடல் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சான்றளிக்கப்பட்ட பொறியாளர்களால் மேற்கொள்ளப்படும்  புவி தொழில்நுட்ப ஆய்வுகளின் தொடக்கக் கட்டத்தில், குறிப்பாக திட்டமிடல் ஒப்புதல் விண்ணப்ப நடைமுறையின் போது ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் மேம்பாடு தொடர்பான நிலையான செயலாக்க நடைமுறைகளை  கூட்டரசு பிரதேச துறை மற்றும்  டி.பி.கே.எல். வலுப்படுத்தும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதற்கிடையில்,  கடந்த  23ஆம் தேதி  ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட பூமி  உள்வாங்குதல் சிக்கிய  இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த சமீபத்திய நிலவரங்களை விளக்குவதற்காக மலேசியாவுக்கான இந்திய  தூதர் பி.என். ரெட்டியுடன் தான் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக டாக்டர் ஜாலிஹா கூறினார்.

அனைவரும் அமைதி காக்க வேண்டும். கோலாலம்பூரில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுதான் இப்போது எங்களின் முன்னுரிமை. இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.