NATIONAL

அந்நியப் பிரஜைகள் சோதனைக்கு உட்படாமல் நாட்டிற்குள் நுழைய  உதவிய கும்பலை எம்.ஏ.சி.சி. முறியடித்தது 

21 ஆகஸ்ட் 2024, 9:48 AM
அந்நியப் பிரஜைகள் சோதனைக்கு உட்படாமல் நாட்டிற்குள் நுழைய  உதவிய கும்பலை எம்.ஏ.சி.சி. முறியடித்தது 

புத்ராஜெயா, ஆக. 21- அதிகாரிகளின் முறையான சோதனைக்கு உட்படாமல் நாட்டிற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகளை அந்நிய நாட்டுப பிரஜைகளுக்கு செய்து வந்த கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) முறியடித்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு மற்றும் கிளந்தானில் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப் பம்ப்‘ என்ற சோதனை நடவடிக்கையின்  வாயிலாக 20 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்ததன் வழி இக்கும்பலின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டதாக எம்.ஏ.சி.சி. ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு நிறுவன உரிமையாளர்கள், வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பொது மக்கள் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் பணிபுரிந்து வரும் ஐந்து அமலாக்க அதிகாரிகளும் அடங்குவர் என அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதக் கும்பல்களின் நடவடிக்கைகள் மற்றும் அக்கும்பல்களுக்கு உடந்தையாக இருந்து வரும் அமலாக்க நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் வாயிலாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையின் வாயிலாக அக்கும்பல் பெரும் தொகையை லாபமாக ஈட்டியுள்ளதாக நம்பப்படுகிறது. கடந்த 2022 முதல் 20214 வரையிலான காலக்கட்டத்தில் 40 லட்சம் வெள்ளி  மதிப்பில் பணப்புழக்கம் நடைபெற்றுள்ளது. சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதற்காக இப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி அமலாக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டினருக்கான நுழைவு நடைமுறைகளை எளிதான முறையில் விரைவாக  மேற்கொள்வதற்கு ஏதுவாக நாட்டின் நுழைவாயில்களில் உள்ள குறிப்பிட்ட முகப்பிடங்களில் பணியில் இருக்கும் அமலாக்க அதிகாரிகளுடன் இக்கும்பல் கூட்டாகச் செயல்பட்டு வந்துள்ளது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.