NATIONAL

பெட்ரோல் நிலையம் முன் ஆடவரிடம் கொள்ளையிட முயற்சி-நான்கு ஆடவர்கள் கைது

8 ஆகஸ்ட் 2024, 3:23 AM
பெட்ரோல் நிலையம் முன் ஆடவரிடம் கொள்ளையிட முயற்சி-நான்கு ஆடவர்கள் கைது

ஷா ஆலம், ஆக. 8 - மரக் கட்டையை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆடவர் ஒருவரிடம் கொள்ளையிட முயன்ற நான்கு உள்நாட்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஷா ஆலம் நெடுஞ்சாலையின் (கெசாஸ்) சுபாங் ஜெயாவிலுள்ள பெட்ரோல் நிலையம் முன் நேற்று அதிகாலை நிகழ்ந்தது.

முப்பது முதல் 41 வயது வரையிலான அந்த நால்வரையும் சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் டி 9 குற்றப் புலனாய்வுத் துறையினர் நேற்று மாலை 5.30 மணியளவில் கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் கைது  செய்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

அந்த நான்கு சந்தேகப்பேர்வழிகளும் குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் முந்தையக் குற்றப்பதிவுகள் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், அவர்களை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான அனுமதி இன்று நீதிமன்றத்தில் பெறப்படும் என்றார்.

ஒரு புகார்தாரர் அளித்த போலீஸ் புகாருடன் அந்த நால்வரும் தொடர்புடையவர்களாக இருக்கக் கூடும் என தாங்கள் சந்தேகிப்பதாக அவர்  இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஆறு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப் பட்டன என்று அவர் சொன்னார்.

கொள்ளை முயற்சி தொடர்பில் நான்கு சந்தேக நபர்களைத் தாங்கள் தேடி வருவதாக சுபாங் ஜெயா மாவட்ட  போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஜிசான் வான் மாமாட் முன்னதாக கூறியிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய ஆடவரிடமிருந்து தாங்கள் நேற்று விடியற்காலை 1.37 மணியளவில் புகாரைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபரின் காரை மற்றொரு காரும் மோட்டார் சைக்கிளும் வழி மறிப்பதையும் அதிலிருந்து இறங்கிய சில ஆடவர்கள் அந்நபரை மரக்கட்டையால் தாக்குவதையும் சித்தரிக்கும் 46 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இந்த காட்சிகள் பாதிக்கப்பட்ட நபரின் காரின்  கேமராவில் பதிவானதாக நம்பப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.