NATIONAL

ஆகஸ்டு  1ஆம் தேதி தொடங்கி சுபாங்கிலிருந்து ஆறு விமான நிறுவனங்கள்  செயல்படும்

30 ஜூலை 2024, 9:42 AM
ஆகஸ்டு  1ஆம் தேதி தொடங்கி சுபாங்கிலிருந்து ஆறு விமான நிறுவனங்கள்  செயல்படும்

சுபாங், ஜூலை 30 - எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தொடங்கி இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து செயல்பட இருக்கும்  ஆறு விமான நிறுவனங்கள் குறுகிய உடலமைப்பு கொண்ட  விமானங்களைப் பயன்படுத்தும்.

ஃபயர்பிளை, ஏர் ஏசியா மலேசியா, பாத்தேக் ஏர் மலேசியா, எஸ்கேஎஸ் ஏர்வேய்ஸ், டிரான்ஸ்நூசா மற்றும் ஸ்கூட் பிரைவேட் லிமிடெட் ஆகியவையே அந்த  ஆறு நிறுவனங்களாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

சுபாங் விமான நிலையத்திலிருந்து  புறப்படும்  முதல்  விமானமாக மலேசியாவின் பாத்தேக் ஏர் விளங்கும். அந்த விமானம்  ஆகஸ்டு 1 ஆம் தேதி மதியம் பினாங்கிற்கு  புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நாளில் பிற்பகல் 2.00 மணியளவில் ஜகார்த்தாவிலிருந்து டிரான்ஸ்நூசா விமானம் இங்கு வந்தடையும் என்று அவர் சுபாங் விமான நிலையத்தில்  நடந்த  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த விமான நிலையம் குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் இருப்பதால் நள்ளிரவு வேளையில் விமானச் சேவை மேற்கொள்ளப் படாது. மாறாக,  அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விமானச் சேவைகள் இருக்கும் என்றார் அவர்.

அனைத்து ஜெட் விமான நடவடிக்கைகளும்  2002 ஆம் ஆண்டில்  சிப்பாங்கிலுள்ள   கோலாலம்பூர் அனைத்துலக  விமான நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் சுபாங் விமான நிலையத்தில் குறுகிய உடலமைப்பு கொண்ட விமானச் சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

காற்றாடிகளை கொண்டு இயங்கும் டர்போபிராப்ஸ் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இலகு ரக இராணுவ விமானங்கள் மற்றும் பிசினஸ் ஜெட் போன்ற  விமானங்களை கையாளும் அளவுக்கு மட்டுமே இந்த விமான நிலையம் வரம்புகளைக் கொண்டிருந்ததாக அந்தோணி லோக் கூறினார்.

இடைக்கால ஜெட் பயன்பாட்டிற்காக  ஏப்ரான் எனப்படும் விமானம் நிறுத்துமிடம்  மறுகட்டமைக்கப்பட்டது. அதன் மூலம்  இப்போது போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ320 உட்பட குறுகிய உடலமைப்பு கொண்ட  ஆறு ஜெட் விமானங்களுக்கு  இடமளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.