ஷா ஆலம், ஜூலை 26: நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் (எல்ஆர்ஏ) தற்காலிகப் பணி நிறுத்தத்தால் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை யால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நிலைமை முழுமையாக சீரடைந்தது.

இக்காலம் முழுவதும் பொறுமை காத்து ஒத்துழைப்பு வழங்கிய பயனர்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.

குவாங் மற்றும் செம்பா ஆறுகளில் நீரில் துர்நாற்றம் உணரப்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதனால், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய ஏழு இடங்களில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நீர் விநியோக நடவடிக்கையில் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் நல்லடக்க சடங்கு நடைபெறும் இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என ஆயர் சிலாங்கூர் கூறியது.

ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் X பக்கம் போன்ற அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு தளங்கள் மூலம் அவ்வப்போது திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை குறித்த தகவல்களைப் பெறலாம் அல்லது 15300 என்ற எண்ணில் ஆயர் சிலாங்கூரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.