NATIONAL

இஸ்ரேலிய பிரஜைக்கு ஆயுதம் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதிக்கு ஜாமீன் மறுப்பு

26 ஜூலை 2024, 3:05 AM
இஸ்ரேலிய பிரஜைக்கு ஆயுதம் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதிக்கு ஜாமீன் மறுப்பு

கோல சிலாங்கூர், ஜூலை 26 - இஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு சுடும் ஆயுதங்களை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதியர் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி செய்து கொண்ட மனுவை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஷரிபா பராஹா சைட் ஹூசேன் (வயது 41) மற்றும் அப்துல் அஜிம் முகமது யாசின் (வயது 41) ஆகியோர் செய்த இந்த மனுவை நிராகரிப்பதில் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டம் (கடும் தண்டனை) சம்பந்தப்பட்ட இரு வழக்குகளில் கூட்டரசு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளை தாம் முன்மாதிரியாகக் கொள்வதாக நீதிபதி அகமது ஃபைடா  கூறினார்.

மேலும், இந்த ஜாமீன் மனுவில் எந்த பிரத்தியேகக் காரணத்தையும் எதிர்த்தரப்பு முன்வைக்கவில்லை. ஆகவே, இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட அவர் இந்த வழக்கை வரும் ஆகஸ்டு 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக, இந்த விசாரணையின்போது தனது வாதத்தை முன் வைத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், முகமது ஃபாக்ருராஸி அகமது சலிம், குற்றஞ்சாட்டப்பட்ட இவ்விருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறினார்.

விசாரணையின் போது மேலும் கடுங் குற்றங்களை அவர்கள் புரிவதை தடுப்பதற்கும் அரசுத் தரப்பு சாட்சிகளுக்கு தொல்லை தராமல் இருப்பது உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுவது அவசியமாகும் என்றார் அவர்.

இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ஈசா முகமது ஃபாசீர், நீதிமன்றம் தனது விவேகத்திற்குட்பட்டு தனது கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்கலாம் எனத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி இரவு 8.00 மணியளவில் கோல சிலாங்கூர், கம்போங் பிளிம்பிங்கில் உள்ள ஒரு வீட்டில் சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததாக அவ்விருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.