கோலாலம்பூர், ஜூலை 25: சுற்றுலா வரியாக அரசாங்கம் RM308.33 மில்லியனை 2018 முதல் 2022 வரை வசூலித்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையில் 2018 இல் RM135.49 மில்லியன் வசூலிக்கப்பட்டது. அதில் RM67.74 மில்லியன் மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும், 2019இல் RM134.94 மில்லியன் பெறப்பட்டது. அதில் RM67.47 மில்லியன் மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
கூடுதலாக, RM37.90 மில்லியன் 2020 மத்தில் சேகரிக்கப்பட்டது, RM18.95 மில்லியன் மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டது. “இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயால் ஜூலை 1, 2020 முதல் டிசம்பர் 31, 2022 வரை சுற்றுலா வரி வசூல் நிறுத்தப்பட்டது. சுற்றுலா வரி ஜனவரி 1, 2023 முதல் மீண்டும் தொடங்கியதாக அவர் மக்களவையில் கூறினார்.
இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள சுற்றுலா வரியின் மொத்த தொகை மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த செனட்டர் டத்தோ முகமட் ஹிசாமுடின் யஹாயாவின் கேள்விக்கு தியோங் பதிலளித்தார்.
சுற்றுலா வரி வருவாய் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துறைகளின் வளர்ச்சி தொடர்பான நோக்கத்திற்காக மட்டுமே செலவிட முடியும்.
இதில் சுற்றுலா வசதிகள், கட்டிடங்கள், பாரம்பரிய தளங்களின் பராமரிப்பு மற்றும் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.
அதுமட்டுமில்லாமல், சுற்றுலா தலங்களின் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார புள்ளிவிவரங்களின் தொகுப்பில் மேம்பாடுகள், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார தயாரிப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகள் ஆகியவையும் அடங்கும்.
- பெர்னாமா


