கோலா பிலா, ஜூலை 24 - தம்பின், கெமெஞ்சோவில் உள்ள ஒரு வீட்டில் தனது சொந்த மகளை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பாலியல் பலாத்காரம் செய்ததாக பால்வெட்டுத் தொழிலாளிக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி நோர்மா இஸமாயில் முன்னிலையில் தமக்கெதிராக கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை அந்த 52 வயது அந்த ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜூலை 8 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் சட்டம், மத வழக்கம், சம்பிரதாயம் அல்லது நடைமுறையில் அனுமதிக்கப்படாத ஒரு செயலை அதாவது தனது 24 வயது மகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதே வீட்டில் கடந்த 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடையே தனது மகளுக்கு 20 வயதாக இருந்தபோது இதே செயலை புரிந்ததாக அவருக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 376பி(1) பிரிவின் கீழ் குற்றம் அவர் மீது சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை அரசு துணை வழக்கறிஞர் நோராசிஹா அஸ்முனி நடத்தும் வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.


