ஷா ஆலம், ஜூலை 24- குவாங் மற்றும் செம்பா ஆறுகளில் நீரில்
துர்நாற்றம் உணரப்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்திகரிப்பு
மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட நீர்
விநியோகத் தடை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகிறது.
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்
விநியோகம் 14.3 விழுக்காடு வழக்க நிலைக்குத் திரும்பியதாகப்
பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
இந்த நீர் மாசுபாடு காரணமாக மூடப்பட்ட ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை
சிலாங்கூர் முதல் கட்டம், சுங்கை சிலாங்கூர் இரண்டாம் கட்டம், சுங்கை
சிலாங்கூர் மூன்றாம் ஆகிய நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களும்
முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக அது தெரிவித்தது.
அந்த நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களும் முழுமையாகச் செயல்படத்
தொடங்கிய நிலையில் சுத்திகரிக்கப்பட்ட, சுத்தமான மற்றும் பாதுகாப்பான
நீரை பயனீட்டாளர்களுக்கு விநியோகிக்கும் பணி கட்டங் கட்டமாக
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக்
பக்கத்தில் கூறியது.
நீர் விநியோகம் கிடைக்கப் பெற்றவர்கள் நீர் தெளிவாகும் வரை ஐந்து
முதல் பத்து நிமிடங்களுக்கு குழாயை திறந்து விடும்படி அது கேட்டுக்
கொண்டது.
மீண்டும் விநியோகிக்கப்படும் நீர் கலங்கிய நிறத்தில் காணப்படுவது
குறித்து யாரும் கலக்கமடைய வேண்டாம். தடைபட்ட நீர் விநியோகம்
மறுபடியும் வழக்க நிலைக்குத் திரும்பும்போது நீரின் வர்ணம் மாறுபடுவது
வழக்கமான ஒன்றே என அந்நிறுவனம் தெளிவுபடுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் நாளை காலை 8.00 மணியளவில் 40 விழுக்காடாகப் பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இரவு 8.00 மணியளவில் நீர் விநியோகம் 90 விழுக்காட்டை எட்டி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு முழுமையாகச் சீரடையும் என அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.
பயனீட்டாளர்களின இருப்பிடம் மற்றும் நீர் விநியோக பகிர்வு முறையில்
காணப்படும் நீர் அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் நீர் விநியோக
நேரம் இடத்திற்கு இடம் மாறுபடும் எனவும் அது தெளிவுபடுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி
மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இந்த நீர் விநியோக
நடவடிக்கையில் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ்
மையங்கள் மற்றும் நல்லடக்க சடங்கு நடைபெறும் இடங்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் ஆயர் சிலாங்கூர் கூறியது.


