பட்டர்வொர்த், ஜூலை 24 - இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலிம் முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பினாங்கின் வரலாற்றுச் சின்னமாக விளங்கிய பெர்ரி படகு இன்று அதிகாலை கடலில் மூழ்கியது.
"பூலாவ் கபாஸ்" என்று அழைக்கப்படும் பெர்ரியை மீட்கும் பணியில் பினாங்கு துறைமுக ஆணையம் (பி.பி.சி.) ஈடுபட்டுள்ள வேளையில் தீயணைப்புத் துறை படகுத் துறையில் எண்ணெய் கசிவைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதிகாலை 3.00 மணியளவில் அந்த பெர்ரிப் படகு மூழ்கியது. முன்னதாக வீசிய பலத்த காற்றின் காரணமாக பெர்ரியுடன் பிணைக்கப் பட்டிருந்த கயிறு அறுந்ததால் அது ஒரு பக்கமாகச் சாய்ந்தாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் டத்தோ இயோ சூன் ஹின், இதன் தொடர்பில் விரைவில் ஊடக அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
126 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பினாங்கு பெர்ரி படகுச் சேவை கடந்த 2020ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக பயணிகளுக்காக வேகப் படகுகளும் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களைக் கொண்டுச் செல்ல பெர்ரி படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
அந்த பெர்ரி படகின் வரலாற்று மதிப்பு மற்றும் அந்தஸ்தைப் பாதுகாக்கும் வகையில் இரண்டு படகுகளில் ஒன்றை ஒரு மிதக்கும் உணவகமாகவும் மற்றொன்றை தஞ்சோங் சிட்டி மெரினாவில் அருங்காட்சியகமாகவும் மாற்ற பி.பி.சி திட்டமிட்டிருந்தது.


