NATIONAL

ஆட்டிஸம் சிறுவன்  மீது வன்முறையை பயன்படுத்தியதாக ஆசிரியர்  தினேஷ் மீது குற்றச்சாட்டு

24 ஜூலை 2024, 7:50 AM
ஆட்டிஸம் சிறுவன்  மீது வன்முறையை பயன்படுத்தியதாக ஆசிரியர்  தினேஷ் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24 - சிறப்பு குழந்தை பராமரிப்பு மையம்  ஒன்றில் ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவனுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியதாக சுமத்தப் பட்டக்  குற்றச்சாட்டை  ஆசிரியர் ஒருவர் இன்று  இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.

இங்குள்ள தின பராமரிப்பு மையத்தில் கடந்த  ஜூலை 16ஆம் தேதி காலை 11.50 மணியளவில் அந்த ஆறு வயது சிறுவனுக்கு எதிராக இக்குற்றத்தைப் புரிந்ததாக எம்.தினேஷ் (வயது 33) அந்த ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாத சிறைத் தண்டனை அல்லது  1,000 வெள்ளி  அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும்  தண்டனைச் சட்டம் 352வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 1,000 வெள்ளி  ஜாமீனில் விடுவிக்க  பரிந்துரைத்த துணை அரசு வழக்கறிஞர் அஸ்மா ஜம்ரி, வழக்கு முடியும் வரை  பாதிக்கப் பட்டவரை தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தினேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒய். ஷர்வின் நாயர், அரசுத் தரப்பு முன்மொழிந்த கூடுதல் நிபந்தனைகள் மற்றும் ஜாமீன் தொகைக்கு ஆட்சேபம்  தெரிவிக்கவில்லை.

குற்றஞ்சாட்டப் பட்டவரை  ஒரு நபர் உத்தரவாதத்துடன் 1,000  வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி  வழங்கிய மாஜிஸ்திரேட் ஷாரில் அனுவார் அகமது முஸ்தாபா,   இந்த வழக்கின் மறு விசாரணையை  ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவன் ஒருவனை நாற்காலியிலிருந்து விழும் வரை தாக்கி, உதைத்தது தொடர்பில் ஆசிரியர் ஒருவர்  ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.