வாஷிங்டன், ஜூலை 24 - பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப்பிற்கு கொலையாளியால் காயம் ஏற்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குநர் கிம்பர்லி சீட்டல் தனது பதவியை ராஜினாமா செய்ததாக வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்தது.
கடந்த ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியாவின் பட்லர் நகரகல் நடைபெற்ற திறந்த வெளிப் பேரணியின்போது டிரம்ப் மீது கூரையிலிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து நடப்பு மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான உளவுப் பிரிவு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
ஜூலை 13ஆம் தேதி என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். அது மீண்டும் நிகழாது என்று அதிபர் ஜோ பைடன் ஒரு அறிக்கையில் கூறினார். அப்பதவிக்கு சீட்டலுக்குப் பதிலாகப் புதியவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று அவர் பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவின் முன் ஆஜரானபோது இரு தரப்பின்கடும் கண்டனங்களை சீட்டல் எதிர்நோக்கினார்.
பல குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்பின் வலது காதை தோட்டா உராய்ந்துச் சென்றது. பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். 20 வயதான தாமஸ் க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்ட துப்பாக்கிக்காரன் உளவுப் பிரிவு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்.


